அரசு வேலைக்கு ஆசை காட்டி 3 கோடிக்கு மேல் மோசடி செய்த பெண் கைது

Admin

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் உளுந்தூரை சேர்ந்தவர் இளந்தீபன் (33) இந்திய உணவு கழகத்தில் வேலைக்காக முயற்சி செய்துகொண்டிருந்தார். அவரிடம் சிதம்பரம் சிலுவைபுரத்தை சேர்ந்த ஷோபியா (32) என்பவர், தான் இந்திய உணவு கழகத்தில் கட்டுப்பாட்டு அதிகாரியாக பணிபுரிவதாக கூறி அதற்கான அடையாள அட்டையை காண்பித்தார்.

ரூ.5 லட்சம் கொடுத்தால் இந்திய உணவு கழகத்தில் வேலை வாங்கித்தருவதாக ஷோபியா கூறினார். இதை நம்பிய இளந்தீபன் முதற்கட்டமாக ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை ஷோபியாவிடம் கொடுத்தார். பணத்தை பெற்ற ஒரு வாரத்தில் பணிநியமன ஆணையை இளந்தீபனிடம் ஷோபியா கொடுத்தார்.

அந்த ஆணையுடன் இளந்தீபன் பணியில் சேர சென்றபோது தான் அது போலியானது என்பது தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இளந்தீபன் சிதம்பரம் தாலுகா காவல்துறையினரிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஷோபியா, அவரது தாய் ஆரோக்கியசெல்வி (50) ஆகியோர் பல இளைஞர்களிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு, கடலூரில் கணினி மையம் நடத்திவரும் ரவிச்சந்திரன் (33) என்பவருடன் சேர்ந்து போலி ஆவணங்கள் தயாரித்து ஏமாற்றி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து ஆரோக்கியசெல்வியையும், ரவிச்சந்திரனையும் கடந்த 21–ந் தேதி காவல்துறையினர் கைது செய்தனர். ஷோபியா தலைமறைவானார்.

தனிப்படை காவல்துறையினர் கடலூர் செம்மண்டலத்தில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த ஷோபியாவை கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

ஷோபியா மொத்தம் 74 பேரிடம் இருந்து ரூ.3 கோடிக்கு மேல் வசூலித்து மோசடி செய்துள்ளார். பணம் கொடுத்தவர்களை நம்பவைப்பதற்காக போலி பணி நியமன ஆணையை கொடுத்துள்ளார். உண்மை தெரிந்தபிறகு, ஷோபியாவை தொடர்புகொண்டு பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். ஆனால் ஷோபியா 10 அடியாட்களை வைத்துக்கொண்டு அவர்களை மிரட்டி உள்ளார்.

ஷோபியாவின் வீட்டில் இருந்த போலி பணி நியமன ஆணைகள், சான்றிதழ்கள், கார், போலி முத்திரைகள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ஷோபியாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

ஷோபியா மோசடி செய்த பணத்தில் ஒரு பங்களா வீட்டை வாடகைக்கு எடுத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். புதிய காரும் வாங்கியுள்ளார். சிதம்பரத்தில் ரூ.20 லட்சத்திலும், கடலூரில் ரூ.35 லட்சத்திலும் புது வீடு கட்டி வருகிறார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

தமிழகத்தில் 19 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

70 தமிழகம் முழுவதும் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார். பணியிட மாற்றம் அடைந்த அதிகாரிகள் விபரம் பின்வருமாறு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452