காவலர் தினம்

அன்னையர் தினம், காதலர் தினம், குழந்தைகள் தினம், கல்லூரி தினம், பஸ் டே, ஆசிரியர் தினம், தந்தையர் தினம் என்று இப்படி பல தினங்களை மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றார்கள். இதில் காதலர் தினம், ஒரு பெண் ஒரு ஆண் அவர்களின் சுயநலத்திற்காக காதலிப்பார்கள்.

அதற்கு ஒருநாள் குறிப்பிட்டு அதை காதலர் தினம் என்று கொண்டாடுகின்றனர். இப்படியாக பல தினங்களை அடையாளம் கண்டு கொண்டாடும் இந்த வேளையில் நமது காவலர்கள் பொதுமக்களுக்காகவும், நாட்டிற்காகவும் நேரம் காலம் பார்க்காமல் பண்டிகை தினங்கள், விடுமுறை நாட்கள் இப்படி எந்த ஒரு நாட்களையும் இவர்களுக்காக எடுத்துக் கொள்ளாமல் நாம் (பொதுமக்கள்) குடும்பத்துடன் இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டு இருக்கும் நேரம் நம் பாதுகாப்பு கருதி காவலர்கள் அவர்களின் குடும்பத்தை விட்டு எங்காவது ஒரு பகுதியில் ரோந்து  பணியில் இருப்பார்கள்.

பண்டிகை போன்ற விஷேசமான நாட்களில் நாமெல்லாம் நம் வீட்டில் சமைத்து அறுசுவை உணவை குடும்பத்துடன் அமர்ந்து ரசித்து, ருசித்து சாப்பிட்டு கொண்டிருக்கும் வேளையில் நமது காவலர்கள் பந்தோபஸ்து என்ற பெயரில் எங்கோ ஒரிடத்தில் கொளுத்தும் வெயிலிலும், மழையிலும் பாதுகாப்பு கருதி பணியில் இருப்பார்கள். இவர்களுக்கு நேரத்திற்கு சரியாக சாப்பிடக்கூட உணவு கிடைப்பதில்லை.

சாதாரண நாட்களில் காவல் நிலையத்திற்கு வரும் புகார்களின் மீது விசாரணை நடத்தும் போதும் இரு புகார்களின் தாரர்களுக்கும் சிபாரிசாக மேலதிகாரிகள், அரசியல்வாதிகள், ஆளும் கட்சியினர், எதிர் கட்சியினர், ஜாதி கட்சியினர் என்று அதிக அளவில் சிபாரிசு பிரஷர் இருக்கும்.

இந்த சூழ்நிலையில் காவல் ஆய்வாளர்கள், அதிகாரிகள், காவலர்களின் மனநிலை எந்தளவிற்கு பாதிக்கும் என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இதற்கு உதாரணமாக.. சமீபத்தில் மரணமடைந்த காவல் ஆய்வாளர்கள் ஒரு சிலர் உள்ளார்கள். நாம் சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இப்படி பொதுமக்களுக்காகவும், நாட்டுக்காகவும் கஷ்டப்படும் காவலர்களுக்காக மற்றும் நாட்டுகாக தன்னுயிர் தந்த காவலர்களுக்காகவும் 1959 – அக்டோபர் 21 ஆம் தேதி முதல் ஆண்டுதோறும் அனைத்து மாநிலங்களிலும் கடைபிடிக்கப்படுகிறது. வருடத்தில் ஒருமுறையாவது இந்த தியாக நாளை நாடு முழவதும் பொதுமக்களால் கொண்டாடி காவலர்களுக்கு பொதுமக்கள் சார்பாக இனிப்புடன் நினைவு பரிசுகளையும் வழங்கி அவர்களை ஊக்குவித்து கௌரவித்தால் அவர்களின் மனநிலை மற்றும் அவர் குடும்பத்தினர் மனநிலை எப்படி இருக்கும் என நினைத்துப் பாருங்கள்.

பொதுமக்களுக்காக அவர்கள் படும் இந்த துன்பங்களை பொதுமக்களாகிய நாம் அவர்களை ஊக்கப்படுத்தி கௌரவிக்கும் அந்த ஒரு காவலர் தினம் இன்ப தினமாக மாறும்.காவலர் தினம் கொண்டாடுபவர்கள் பொதுமக்களாக இருக்க வேண்டும்.

நமது    இந்தியத் திருநாட்டில் எந்த ஊராக இருந்தாலும் நான்கு சாலைகள் சேர்ந்தால் ஏதாவது ஒரு நகர் என்று பெயர் வைத்திருப்பார்கள். அந்த நகரில் உள்ள குடியிருப்போர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குடியிருப்போர் நலச்சங்கம் என பெயரிட்டு அந்த நகரில் உள்ள குறைகளை, தேவைகளை தகுந்த அலுவலர்களிடம் மனு கொடுத்து நகரின் பிரச்சனைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள்.

இந்த குறைகளை தீர்த்துக் கொள்ள உறுதுணையாக அந்நகர எல்லைக்குட்பட்ட காவல் நிலையம் முக்கிய பங்கு வகிக்கும். இப்படியாக எல்லா வகையிலும் அந்தந்த நகர்களில் உள்ள பொதுமக்களைத் தவிர வேறு யாராலும் காவலர் தினம் என்று அந்த நாளை சிறப்பாக கொண்டாட முடியாது.

ஆகையால் இந்த ஒரு நல்ல விஷயத்தை நாம் ஏன் முதன் முதலில் தமிழ்நாட்டில் இருந்து தொடங்கக் கூடாது. எங்கும் தமிழன் எதிலும் தமிழன் என்று இருக்கும்போது காவலர் தினம் கொண்டாடுவதிலும் தமிழன் முதல்வனாகத் திகழட்டுமே. ஒரு காவல் நிலையத்திற்குட்பட்ட நகர்களில் வசிக்கும் அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து அந்தந்த குடியிருப்பு சங்கங்கள் மூலமாக அவர்களின் பகுதி காவல் நிலையத்தை அழகுபடுத்தி காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவலர்களுக்கும் இனிப்புடன் நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டு விழா நடத்தினால் நமக்காகவும் நாட்டுக்காகவும் அவர்கள் செய்யும் சேவைக்கு ஒரு சிறிய நன்றியைத் தெரிவித்தது போல் இருக்குமல்லவா?
மதிப்பிற்கும் மரியாதைக்குரிய வாசகர்களே ! நீங்கள் இந்த கட்டுரையினை படித்து தமிழ் நாட்டில் உள்ள எந்த ஒரு பகுதியினைச் சேர்ந்த குடியிருப்பு நலச்சங்கத்தினரானாலும் இப்படி ஒரு அருமையான காவலர் தினம் கொண்டாட முதன் முதலில் முன் வந்தால் இந்த விழாவிற்கான அனைத்து உதவிகளையும் மிக மகிழ்ச்சியுடன் நியூஸ்மீடியா அசோஸியேஷன் ஆப் இந்தியா (Newsmedia Association of India) சங்கத்தின் சார்பாக சிறப்பாக செய்து கொடுக்க காத்திருக்கின்றோம்.

அன்பார்ந்த வாசகர்களே.. இதனை படித்து காவலர்களுக்கு எதற்கு காவலர்தினம் விழா எடுக்க வேண்டும். அவர்களின் கடமையைத்தான் செய்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். உயிர் உள்ள அனைவருக்கும் அந்தந்த காலக்கட்டத்திற்கு ஏற்ப கடமைகள் உண்டு. ஆனால் காவலர்களின் கடமை முற்றிலும் வித்தியாசமானது. உயிரை பணயம் வைத்து சரியான உணவு, உறக்கம் இல்லாமல் ஆற்றும் கடமை முற்றிலும் வித்தியாசமானது.
சினிமா படங்களில் காவலர்களை தவறாக சித்தரித்துக் காட்டினால் அதனைப் பார்த்து கை தட்டும் நம்மில் பல பேர் ஏன் இவர்களுக்கு ஒரு பாராட்டு விழா நடத்தி; அந்த விழா மேடையில் காவலர்களை கௌரவிக்கும்போது நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இன்னும் பலமாக கைத்தட்டலாமே..!

நியூஸ்மீடியா அசோஸியேஷன் ஆப் இந்தியா (Newsmedia Association of India) சங்கத்தின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 24 ஆம் தேதி நம் அன்பை செலுத்திடுவோம் ! நம் காவலர்களுக்கு !

 

 

 

 

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452