புதிதாக திறக்கப்பட்ட மணல் குவாரியில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் குவிப்பு

Admin

கடலூர்: நெல்லிக்குப்பம் அருகே வான்பாக்கம் தென்பெண்ணையாற்றில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மணல் குவாரி திறக்கப்பட்டது. இங்கிருந்து மணல்கள் லாரி மூலம் அள்ளப்பட்டு சேமிப்பு கிடங்கில் கொட்டப்பட்டு, ஆன்–லைன் மூலம் பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த மணல் குவாரியால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு பலகட்ட போராட்டம் நடத்தினர். ஆனால் அவ்வப்போது அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தி, காவல் பாதுகாப்புடன் மணல் குவாரியை செயல்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வான்பாக்கத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் அழகியநத்தம் என்ற பகுதியில் உள்ள தென்பெண்ணையாற்றில் மேலும் ஒரு மணல் குவாரி தொடங்கப்பட்டது. இந்த 2 மணல் குவாரிகளையும் மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் அழகியநத்தம் மணல் குவாரியில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலையில் உள்ள விஸ்வநாதபுரம் தென்பெண்ணையாற்றில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதிதாக மற்றொரு மணல் குவாரி திறக்கப்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையே மணல் குவாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டு பெரிய அளவில் போராட்டம் நடத்த இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையொட்டி நேற்று 100–க்கும் மேற்பட்ட காவல்துறையினர் விஸ்வநாதபுரம் மணல்குவாரியில் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து அங்கு பலத்த காவல் பாதுகாப்புடன் மணல் குவாரி இயங்கி வருகிறது. இதுதவிர காவல்துறையினர் குழுவாக கிராம பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் உங்கள் கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து நிறைவேற்றிக் கொள்ள வேண்டும், போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவுரை கூறி வருகின்றனர்.

மேலும் அப்பகுதி முழுவதும் அசம்பாவிதம் சம்பவங்களை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மணல் குவாரியில் காவல்துறையினர் குவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் முதலில் வான்பாக்கம் என்ற இடத்தில் மணல் குவாரி திறக்கப்பட்டது. இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறோம். ஒரு மணல் குவாரி தான் என்று நினைத்த வேளையில் தற்போது எங்கள் பகுதி தென்பெண்ணையாற்றில் ஒவ்வொரு 3 கிலோ மீட்டருக்கு இடையே ஒரு மணல் குவாரியை மாவட்ட நிர்வாகம் திறந்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும், மேலும் விவசாய பணிகளும் பாதிக்கப்படும். தற்போது காவல் பாதுகாப்புடன் மணல் குவாரியை இயக்கி வருகிறார்கள். இந்த நிலை மாற்ற விரைவில் கிராம மக்கள் ஒன்று திரண்டு மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

தமிழகம் முழுவதும் காவலர்கள் இரத்த தான முகாம், முதலமைச்சர் துவக்கி வைத்தார்

50 சென்னை: சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் காவலர்கள் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சியை இன்று முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். தமிழக காவல் துறை சார்பில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452