வடலூர் அருகே பஸ் மீது கார் மோதல் தலைமை செயலக அதிகாரி உள்பட 3 பேர் பலி

Admin

கடலூர்: வடலூர் அருகே பஸ் மீது கார் மோதிய விபத்தில் புதுச்சேரி தலைமை செயலக அதிகாரி உள்பட 3 பேர் பலியானார்கள். வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பியபோது நிகழ்ந்த கோர விபத்து பற்றி காவல் தரப்பில் கூறப்பட்டதாவது:–

புதுச்சேரியை சேர்ந்தவர் செல்வமணி(58) இவர் புதுச்சேரி தலைமை செயலகத்தில் அதிகாரியாக இருந்தார். இந்த தலைமை செயலகத்தில் மற்றொரு அதிகாரியான லட்சுமிநாராயணன் என்பவரது மகள் காயத்ரிக்கு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உறவினர்களுக்கும், அவருடன் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு லட்சுமிநாராயணன் அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக செல்வமணி, புதுவை மாநிலம் அரியூர் பாரதிநகரை சேர்ந்த ஆனந்தன் மகன் முருகன்(48), தட்டாஞ்சாவடியை சேர்ந்த வனத்தையன் மகன் ஒப்புலியன்(45) ஆகிய 3 பேரும் ஒரு காரில் கும்பகோணத்துக்கு சென்றனர். அங்கு நிகழ்ச்சி முடிந்ததும் மாலையில் 3 பேரும் அதே காரில் புதுச்சேரிக்கு புறப்பட்டனர். காரை செல்வமணி ஓட்டினார்.

இந்த கார் மாலை 6 மணி அளவில் கும்பகோணம்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருவாய் பரவனாற்று பாலத்தில் வந்தது. அப்போது சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த அரசு பஸ் மீது கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல நொறுங்கியது. பஸ்சின் முன்பகுதியும் சேதமடைந்தது.

இந்த கோர விபத்தில் செல்வமணியும், முருகனும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் படுகாயமடைந்த ஒப்புலியன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மற்றும் அரசு பஸ்சில் வந்த பயணிகள் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஒப்புலியன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ஒப்புலியனின் உடல், விபத்து நடந்த இடத்துக்கே கொண்டு செல்லப்பட்டது.

விபத்து பற்றி தகவல் அறிந்ததும் வடலூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான 3 பேரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தின் காரணமாக கும்பகோணம்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதையடுத்து விபத்துக்குள்ளான காரும், அரசு பஸ்சும் கிரேன் மூலம் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். விபத்து குறித்து வடலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான முருகன், புதுச்சேரி மாநிலம் திருபுவனை அரசு நூற்பாலையில் ஊழியராகவும், ஒப்புலியன் தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு பள்ளி மாணவர்களுக்கு மூச்சுத்திணறல்

101 கடலூர்: விருத்தாசலம் முல்லை நகரில் பாலை பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் அமோனியா வாயு நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், நேற்று […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452