சான்றிதழ் அளிக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி உதவியாளர் கைது கடலூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடவடிக்கை

Admin

கடலூர்: கடலூர் பழையவண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன் (53). விவசாயி. இவருடைய மாமனார் தண்டபாணி கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் குணசேகரன் தன்னுடைய மாமனார் தண்டபாணி இறப்பு சான்றிதழ் கேட்டு கோர்ட்டில் மனு செய்திருந்தார்.

இதற்காக கடலூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து அவருக்கு இறந்து போன தண்டபாணியின் இறப்பை பதிவு செய்யவில்லை என சான்றிதழ் தேவைப்பட்டது. இதையடுத்து குணசேகரன் நகராட்சி பிறப்பு– இறப்பு சான்றிதழ் பிரிவில் உதவியாளராக இருக்கும் கடலூர் அன்னவெளி மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த ராமன் (39) உதவியை நாடினார். பின்னர் அவரிடம் என்னுடைய மாமனார் இறப்பை பதிவு செய்யவில்லை என சான்றிதழ் அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதற்கு உதவியாளர் ராமன், குணசேகரனிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் தந்தால் தான் சான்றிதழ் கிடைக்கும் என்று திட்டவட்டமாக கூறியதாக தெரிகிறது. மேலும் அவருக்கு சான்றிதழ் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். பின்னர் இது பற்றி குணசேகரன் கடலூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய அறிவுரைப்படி, ரசாயன பொடி தடவிய ரூ.3 ஆயிரத்தை கடலூர் நகராட்சி அலுவலகத்தில் பிறப்பு–இறப்பு சான்றிதழ் பிரிவில் இருந்த ராமனிடம் நேற்று குணசேகரன் வழங்கினார். அப்போது அங்கு மறைந்து இருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர்கள் திரு.சதீஷ், திரு.திருவேங்கடம், திரு.திருமால் ஆகியோர் ராமனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மேலும் ஏற்கனவே தயாராகி இருந்த 100 பிறப்பு–இறப்பு சான்றிதழ்களையும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைப்பற்றினர். அந்த சான்றிதழ்களை ஏன்? இன்னும் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கவில்லை என்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் நகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா? என்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

கைது செய்யப்பட்ட ராமன் மீது ஏற்கனவே நில அளவீடு செய்ததில் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீசில் வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. நகராட்சி அலுவலகத்தில் உதவியாளர் கைது செய்யப்பட்ட சம்பவத்தால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கடலூரில், வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து 2 காவல் ஐ.ஜி.க்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை

103 கடலூர்: கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையால் கடலூர் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. மழை வெள்ளத்தில் சிக்கிய 66 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452