பா.ஜனதா கொலை வழக்கில் காவல்துறையினர் அதிரடி

Admin

புதுவையில் பா.ஜனதா வில்லியனூர் மாவட்ட இளைஞரணி தலைவரை கொலை செய்த வழக்கில் 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 வீச்சு அரிவாள்கள், 2 மோட்டார் சைக்கிள்கள், செல்போன்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுவை மாநிலம் குருமாம்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் (35). இவர், பா.ஜனதா வில்லியனூர் மாவட்ட இளைஞரணி தலைவராக இருந்தார். ஜெகன் நேற்று முன்தினம் இரவு அவருடைய மொபட்டில் குருமாம்பேட்டையில் சந்திப்பில் இருந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார்.

அப்போது குருமாம்பேட் அடுக்குமாடி குடியிருப்பு 3–வது குறுக்குத்தெருவில் சென்றபோது, அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் ஒன்று அரிவாளால் ஜெகனை வெட்டினார்கள். இதில் ஜெகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுவிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் தங்கமணி, உதவி-ஆய்வாளர் திரு.வெற்றிவேல் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். ஜெகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஜெகன் செய்யப்பட்ட இடத்தில் கிடந்த மொபட், அவருடைய செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றினார்கள். அதைத்தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சம்பவ இடத்தில் பதிவான சில தடயங்களை சேகரித்து சென்றனர்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். மேலும் வடக்குப்பகுதி கோவல் கண்காணிப்பாளர் ரச்சனாசிங் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் தங்கமணி, உதவி-ஆய்வாளர் திரு.வெற்றிவேல், திரு.ரமேஷ், திரு.குமார் மற்றும் சிறப்பு அதிரடிப்படை காவல் ஆய்வாளர் திரு.கார்த்திகேயன், உதவி-ஆய்வாளர் திரு.ரமேஷ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த வழக்கில் புதுவை தர்மாபுரி கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ரவுடியான இளவரசன் (32), குருமாம்பேட்டை முத்துகுமார் (24), ராஜூ (23), வெற்றிவேல் (24), மேரி உழவர்கரை கார்த்திக் (24) ஆகிய 5 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

அதையடுத்து அவர்கள் 5 பேரையும் பிடிக்க காவல்துறையினர் தீவிரம் காட்டினார்கள். நேற்று முன்தினம் நள்ளிரவு முழுவதும் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அவர்கள் 5 பேரும் ஊசுட்டேரியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர்.

அப்போது அங்கிருந்த இளவரசன், முத்துகுமார், ராஜூ, வெற்றிவேல், கார்த்திக் ஆகிய 5 பேரையும் மடக்கி பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள், ஜெகனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். அதையடுத்து இளவரசன் உள்பட 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 வீச்சு அரிவாள்கள், 3 செல்போன்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

கைதானவர்களிடம் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ‘கொலை செய்யப்பட்ட ஜெகனும், இளவரசனும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்களாக இருந்துள்ளனர். 2010–ம் ஆண்டு ஸ்ரீதர் என்பவரை கொலை செய்த வழக்கில் இவர்கள் இருவருக்கும் தொடர்பு உள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட தொழில்போட்டி காரணமாக ஜெகனும், இளவரசனும் தனித்தனியாக பிரிந்தனர். இதற்கிடையே ஜெகன் பா.ஜனதா கட்சியில் இணைந்து அரசியலில் வளர்ந்து வந்தார். இது இளவரசனுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் ஜெகனை கொலை செய்ய இளவரசன் திட்டம் தீட்டினான். அதன்படி தனது கூட்டாளிகளுடன் இளவரன், ஜெகனை நேற்று முன்தினம் தீர்த்து கட்டியது தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் கைதான இளவரசன் உள்பட 5 பேரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். ஜெகன் கொலை வழக்கில் கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கடலூருக்கு காரில் 444 மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

91 கடலூர்: கடலூர் மாவட்டத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் தூரம் வரை இருந்த டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன. இதனால் தற்போது குறைந்த எண்ணிக்கையிலான […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452