புதுச்சேரியில் இருந்து தப்பி வந்த கொலைகார கும்பலை கடலூரில் மடக்கி பிடித்த காவல்துறையினர்

Admin

கடலூர்: சிவகங்கை மாவட்டம் சித்தலூரை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன்(48) பிரபல ரவுடி. இவர் மீது தமிழகத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் புதுவை வந்து கோவிந்தசாலை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார். இங்கு அவர் நெய்யை மொத்தமாக கொள்முதல் செய்து பாக்கெட் போட்டு கடைகளுக்கு விற்பனை செய்து வந்தார். நேற்று காலை 8.30 மணியளவில் கொளஞ்சிநாதன் தனது மகளை புஸ்சி வீதியில் உள்ள ஒரு பள்ளியில் விட்டு விட்டு வீடு திரும்பினார். புதுதெரு அருகே வந்த போது அவரை பின்தொடர்ந்து ஒரு கார் வந்தது. மோட்டார் சைக்கிளிலும் ஒருவர் வந்தார். திடீரென்று அந்த கார் மோதியதில் நிலைதடுமாறி கொளஞ்சிநாதன் கீழே விழுந்தார்.

இதை எதிர்பாராத அவர் சுதாரித்து எழுவதற்குள் காரில் இருந்து இறங்கியவர்கள் கொளஞ்சிநாதனை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டினர். மோட்டார் சைக்கிளில் வந்தவரும் அவரை வெட்டினார். இதில் காயமடைந்த கொளஞ்சிநாதன் அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓடினார். ஆனாலும் விடாமல் துரத்திச் சென்று சரமாரியாக அவரை வெட்டித்தள்ளினர். இதில் பலத்த காயம் அடைந்த கொளஞ்சிநாதன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து விழுந்தார். பின்னர் அந்த கும்பல் காரில் ஏறி தப்பிச் சென்று விட்டது. மோட்டார் சைக்கிளில் வந்தவரும் தப்பிச் சென்றார்.

பட்டப்பகலில் பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றிய தகவல் அறிந்து ஒதியஞ்சாலை காவல் ஆய்வாளர் திரு.ஜெய்சங்கர், உதவி- ஆய்வாளர் கீர்த்தி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த கொளஞ்சிநாதனை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் புதுச்சேரி காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டனர். அவர்கள் காரில் தப்பிய கும்பலை தீவிரமாக தேடினர். இதற்கிடையே கொளஞ்சி நாதனை படுகொலை செய்த கும்பல் புதுச்சேரி- கடலூர் சாலையில் அடுத்தடுத்து விபத்தை ஏற்படுத்தியபடி மின்னல் வேகத்தில் காரில் வந்தனர். இதை அறிந்த புதுச்சேரி காவல்துறையினர் அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்தனர்.

குற்றவாளிகள் கடலூர் மாவட்ட எல்லைக்குள் செல்வார்கள் என்று கருதிய புதுச்சேரி காவல் உயர் அதிகாரிகள் இது பற்றி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கடலூர் மாவட்ட காவல்துறையினரும் உஷார்படுத்தப்பட்டனர். அதற்குள் அந்த கும்பல் ஆல்பேட்டை சோதனைச்சாவடி வழியாக கடலூருக்குள் வேகமாக வந்தனர். அவர்களை பின்தொடர்ந்து புதுச்சேரி காவல்துறையினரும் வந்தனர்.

காரில் அதிவேகமாக வந்த அந்த கும்பல் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு, கிளை சிறைச்சாலை, நீதிபதிகள் குடியிருப்பு சாலை வழியாக சில்வர் பீச் ரோட்டுக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து வன்னியர்பாளையம், புதுப்பாளையம் வழியாக உழவர் சந்தை அருகில் வந்தனர். வரும்போது தாறுமாறாக காரை ஓட்டி வந்த அவர்கள், ஆங்காங்கே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்களில் மோதி அடுத்தடுத்து விபத்தை ஏற்படுத்தியபடி வந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அவர்களை மோட்டார் சைக்கிளில் துரத்தினர்.

இதனிடையே கார் ஒன்று அதிவேகமாக செல்வதை பார்த்த ஆயுதப்படை காவல்துறையினர், அந்த காரை துரத்தி வந்தனர். கடலூர்-சிதம்பரம் சாலையில் உழவர் சந்தை அருகில் சென்றதும் போக்குவரத்து நெரிசலில் அவர்களால் தொடர்ந்து செல்ல முடியவில்லை. இதனால் காரில் இருந்த 6 பேரும் தப்பி ஓட முயன்றனர். அதில் ஒருவன், தனது கையில் வைத்திருந்த கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டினான். அப்போது அங்கு வந்த ஆயுதப்படை காவல்துறையினர் அந்த கும்பலை மடக்கிப்பிடித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், காவல்; பிடியில் இருந்த 3 பேரையும் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். காரின் முன் பக்க கண்ணாடியையும் அவர்கள் உடைத்தனர். அவர்கள் அணிந்திருந்த சட்டையை ஆவேசத்துடன் கிழித்தெறிந்தனர். தாக்குதலில் அவர்களுக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது.இந்த களேபரத்திற்கிடையே காரில் வந்த கும்பலில் இருந்த 3 பேர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் மக்கள் கூட்டம் அதிக அளவில் கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிடிபட்ட 3 பேரையும் கடலூர் ஆயுதப்படை காவல்துறையினரும், புதுச்சேரி காவல்துறையினரும் ஒரு ஆட்டோவில் ஏற்றி புதுநகர் காவல் நிலையத்துக்கு கொண்டு வர முற்பட்டனர். அப்போதும் அவர்கள் 3 பேரையும் பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.

பின்னர் பொதுமக்களை சமாதானப்படுத்தி அவர்கள் 3 பேரையும் கடலூர் புதுநகர் காவல் நிலையத்துக்கு காவல்துறையினர் அழைத்து சென்றனர். அவர்கள் வந்த காரையும், அதில் ரத்தக்கரை படிந்திருந்த கத்தி, அரிவாள், கம்பி போன்ற பயங்கர ஆயுதங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.அதைத்தொடர்ந்து பிடிபட்ட 3 பேரிடம் கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.நரசிம்மன், காவல் ஆய்வாளர் திரு.சரவணன் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டம் சித்தலூர் மலைச்சாமி மகன் சேவற்கொடி (30), வைரம்பட்டி பண்ணமுத்து மகன் சிவா என்கிற பரமசிவம் (25), கார் டிரைவரான நெல்மண்டி தெரு ராமச்சந்திரன் மகன் சேகர் (26) ஆகிய 3 பேர் என்றும், தப்பி ஓடியது மானாமதுரை உடைகுளம் கண்ணன் (26), மணி (29), நாட்டரசன்பேட்டை அழகர் ஆகிய 3 பேர் என்றும் தெரிய வந்தது.

கடந்த 2013-ம் ஆண்டு சேவற்கொடியின் அண்ணன் சுதாகரை ஓசூரில் வைத்து கொளஞ்சிநாதன் கொலை செய்து விட்டு, தலைமறைவாக புதுச்சேரியில் தங்கி இருந்ததும், அதற்கு பழிக்கு பழி வாங்குவதற்காக கொளஞ்சிநாதனை சேவற்கொடி தலைமையிலான இந்த கும்பல் கொலை செய்ததும் காவல் விசாரணையில் தெரிய வந்தது.3 பேர் பிடிபட்ட சம்பவம் அறிந்ததும் புதுச்சேரி கிழக்கு காவல் கண்காணிப்பாளர் திரு.வெங்கடசாமி, ஒதியஞ்சாலை காவல் ஆய்வாளர் திரு.ஜெயசங்கர் மற்றும் காவல்துறையினர் கடலூர் புதுநகர் காவல் நிலையத்துக்கு வந்தனர். அவர்களிடம் பிடிபட்ட 3 பேரையும், கடலூர் புதுநகர் காவல்துறையினர் ஒப்படைத்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் ஆயுதங்களும் புதுச்சேரி காவல்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்ந்து விசாரணை நடத்துவதற்காக அவர்கள் 3 பேரையும் காவல்துறையினர் புதுச்சேரி அழைத்து சென்றனர். தப்பி ஓடிய 3 பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். சினிமா காட்சியை போல் நடந்த இந்த சம்பவத்தால் கடலூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி புதுச்சேரி கிழக்கு காவல் கண்காணிப்பாளர் திரு.வெங்கடசாமி கூறுகையில், புதுச்சேரியில் கொலை செய்து விட்டு தப்பி வந்த குற்றவாளிகளை புதுச்சேரியில் தேடினோம். அவர்கள் கடலூர் மாவட்டத்துக்கு செல்வதாக கிடைத்த தகவலின் பேரில் கடலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தோம். அவர்கள் குற்றவாளிகளை பிடித்து விட்டார்கள்.

இதற்காக தமிழக காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவிக்கிறோம். தமிழக, புதுச்சேரி எல்லையோரம் நடக்கும் குற்றங்களை தடுக்க கடலூர், விழுப்புரம் மாவட்ட காவல்துறையினருடன் சேர்ந்து ஆய்வு நடத்தி இருக்கிறோம். தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகிறோம். இதன் மூலம் குற்றங்கள் குறைந்து வருகிறது. பழிக்கு பழியாக கொலை செய்யும் செயல்கள் நடக்கிறது. அதையும் கட்டுப்படுத்தி வருகிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

சினிமா பாணியில் கொலையாளிகளை விரட்டிப்பிடித்த தமிழக காவல்துறையினர்

92 புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் ஒதியன் சாலையில் உள்ள துணிக்கடை அருகே வைத்து கொளஞ்சி என்பவரை முன்விரோதம் காரணமாக படுகொலை செய்து விட்டு தப்பிய மூவர் குறித்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452