மோட்டார் வாகன விதி மீறல் காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் பேட்டி

Admin

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மோட்டார் வாகன விதிகளை மீறிய ஒரு லட்சத்து 11 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து 2 கோடியே 5 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் தெரிவித்தார்.

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் கடலூரில் உள்ள அவரது அலுவலகத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார்.

கடலூர் மாவட்டத்தில் 46 காவல் நிலையங்களும், 4 போக்குவரத்து காவல் நிலையங்களும், 6 அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் உள்ளன. காவல் நிலையங்களில் காவலர் பற்றாக்குறை ஏதும் இல்லை. மாவட்டத்தில் உள்ள 4 காவல் உட்கோட்டங்களில் பண்ருட்டி கோட்டத்தில் தான் அதிக அளவு குற்றச்செயல்கள் நிகழ்ந்து உள்ளன.

கடந்த ஆண்டு(2016–ம் ஆண்டு) கடலூர் மாவட்டத்தில் 42 கொலைகள் நடந்து உள்ளன. 42 கொலைகளிலும் எதிரிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நகை, பணம் போன்ற ஆதாயத்துக்காக 4 கொலைகள் நடந்து உள்ளன. கடந்த ஆண்டு நடந்த திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஒரு கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டு உள்ளன. இது திருட்டுபோன பொருட்களில் 75 சதவீதம் ஆகும்.

நன்னடத்தை விதிகளின் கீழ் 1,577 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் அனைவரும் ஆர்.டி.ஓ. கோர்ட்டுகளில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களில் 2 பேர் நன்னடத்தை விதிகளை மீறி குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் 6 மாத சிறை தண்டனை விதித்து கடலூர் சப்–கலெக்டர் உத்தரவிட்டார். கடலூர் மாவட்டத்தில் ஆர்.டி.ஓ. கோர்ட்டால் சிறை தண்டனை வழங்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

நீதிமன்றங்களுக்கும், காவல்துறைக்கும் இடையே நல்ல ஒத்துழைப்பு உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 8 ஆயிரத்து 34 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. பல்வேறு குற்ற வழக்குகளில் ஜாமீனில் விடுதலையாகி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களில் 5 ஆயிரத்து 12 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு உள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் 6,400 பேர் கைது செய்யப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்குப்பின் விடுவிக்கப்பட்டனர். விபத்துக்களை குறைக்கும் நடவடிக்கையாக, மோட்டார் வாகன விதிகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், விபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுதல் போன்ற விதிமீறல்களுக்காக ஒரு லட்சத்து 11 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 2 கோடியே 5 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

கடந்த ஆண்டில் 31 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். பல்வேறு அடி, தடி வழக்குகளில் அடிக்கடி ஈடுபட்ட 81 ரவுடிகளை போக்கிரிகள் பட்டியலில் சேர்த்து, அவர்களின் நடவடிக்கைகளை காவல்நிலையங்கள் மூலம் கண்காணித்து வருகிறோம்.

கடந்த ஆண்டில் காணாமல் போனவர்களில், 43 ஆண்களையும், 117 பெண்களையும், 23 சிறுவர்களையும், 75 சிறுமிகளையும் காவல்துறையினர் மீட்டு உள்ளனர். மணல் கடத்திய குற்றத்துக்காக 240 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 295 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சாராயம் விற்றதற்காகவும், கடத்தியதற்காகவும் 4,864 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4,928 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 12 பேர் தடுப்புக்காவல் சட்டப்படி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 43 ஆயிரம் லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. அதேப்போல் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 57 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மதுக்கடத்தலில் பயன்படுத்தப்பட்ட 156 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஏலம் விடப்பட்டு, அந்த தொகை அரசிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 24 ஆயிரத்து 200 பேருக்கு பாஸ்போர்ட்டு வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் கூறினார்.

அப்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.திருமலைச்சாமி(மதுவிலக்கு அமல் பிரிவு), திரு.மதிவாணன்(தலைமையிடம்), துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு.நரசிம்மன்(கடலூர்), திரு.சாகுல் அமீது(குற்ற ஆவணப்பிரிவு), ஆயுதப்படை ஆய்வாளர் திரு.சிவசங்கரன், தனிப்பிரிவு உதவி- ஆய்வாளர் திரு.சிவப்பிரகாசம், உதவி- ஆய்வாளர் திரு.ரகு, சிறப்பு உதவி- ஆய்வாளர் திரு.ராமச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

ஆலோசனை கூட்டம்

53 கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா வருகிற 11–ந் தேதி(புதன்கிழமை) நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் ராஜேஷ் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452